articles

img

பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லா வீடு 

பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லா வீடு என்றார் லெனின். ஆனால் இன்றும் முழுமையாகப் பெண்ணுரிமை உறுதி செய்யப்பட்டதா என்றால், இல்லை என்பதே கசப்பான உண்மை. குறிப்பாக இந்தியாவில் பெண்களுக்கான உரிமையை அரசே உறுதி செய்ய முன்வர வில்லை என்பதே நிதர்சனம். சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றளவும் நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது காணல் நீராகவே உள்ளது.

பெண்கள் குறித்த சமூக விதிகள், உடல் சார்ந்த வரம்புகள் மற்றும் குடும்பம் சார்ந்த கடமைகள் உள்ளிட்ட காரணங்களால் ஆண்களுக்கு நிகராக, பெண்களுக்கு ராணுவத்தில் பணிவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு வழங்க  இயலாது என்று ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது என்பது சமீபத்திய உதாரணம். கிராமப்புற பின்னணியிலிருந்து வரும் ஆண்கள், தற்போதைய சமூக நடைமுறைகளுக்கு ஏற்றவாறு பெண்களை ஏற்றுக்கொள்ள மனதளவில் இன்றும் தயாராக வில்லை என்று துஷார் மேஹ்தா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வாதம் ஒன்றும் ஏதோ கிராமத்தில் உள்ள கட்ட பஞ்சாயத்தில் ஆணாதிக்க மனோபாவத்துடன் பேசப்பட்டது இல்லை. இந்த நாட்டின் உட்சபட்ச அதிகாரங்களைக் கொண்ட நீதிமன்றத்தில் பெண் உரிமையை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கும், ஒன்றிய அரசின் தரப்பிலான வாதம் என்பதே நிதர்சனம்.

இதுபோன்ற அனைத்து மட்டத்திலான தடைகளைத் தாண்டிதான் பெண் சமூகம், பல தளங்களிலும் தங்களுக்கான உரிமையைக் கல்வியின் துணை கொண்டு சாத்தியப்படுத்தத் தொடர்ந்து முயற்சிக்கிறது. ஆனால் அந்தக்கல்வியும் இங்குப் பெண்களுக்கு முழுமையாக உறுதி செய்துள்ளதா என்றால் அது பெரும் கேள்விக்குறியே!

உலகம் முழுவதும்  6 முதல் 17 வயதுக்குட்பட்ட 13.2 கோடி பெண்கள் இன்னும் பள்ளி செல்ல வில்லை. அவர்களில் 75 விழுக்காட்டினர் இளம் பருவத்தினர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. 

அதேசமயம் கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் டிஜிட்டல் வழி கற்றல் என்ற கலாச்சாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே இந்த ஆண்டு உலக பெண் குழந்தைகள் தினத்தில் டிஜிட்டல் தலைமுறை எங்கள் தலைமுறை என்ற கருப்பொருள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் உலகம் முழுவதும் 2.2 பில்லியின் மக்களிடம் இணைய இணைப்பு இல்லை என்கிறது புள்ளி விபரம். அதிலும் குறிப்பாக 2019ல் இணையப் பயனர்களின் பாலின இடைவெளி 17 விழுக்காடாக உள்ளது. இதுபோன்ற பாகுபாடுகள் வெறும் கல்வியோடு நின்று விடாமல் குழந்தைகளின் திருமணத்திலும் பிரதிபலிக்கிறது. ஏற்கனவே உலகெங்கிலும் உள்ள குழந்தை திருமணம் செய்பவர்களில் 3ல் ஒருவர் இந்தியராக உள்ளனர். 

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான சிறுமிகளைக் குழந்தை திருணத்திற்குள் தள்ளும் அபாயம் உள்ளதாக SAVE THE CHILD அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து  அதிகரித்தே வருகின்றன. குறிப்பாக பிரான்ஸின் மதத்தலங்களில் 3.30 லட்சம் குழந்தைகள், கடந்த 70 ஆண்டுகளில் பாலியல் வன்முறைகளுக்குள்ளானதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் சமீபத்தில் வெளியானது. 

ஏற்கனவே பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்குக் கடுமையாகப் போராடி வரும்  இந்த நிலையில், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பட்ஜெட்டில் பெண்களுக்கான பட்ஜெட் நிதியைத் தொடர்ந்து குறைக்கும் போக்கைக் கையாண்டு வருகிறது. 2020-21 ஆம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்து 261 கோடியாக ஒதுக்கப்பட்டிருந்து. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2021 ஆம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 53ஆயிரத்து 326 கோடியாகச் சுருக்கப்பட்டது. மேலும் 2021 -22ம் ஆண்டு பட்ஜெட்டில் 26% குறைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தியாவில் 2011 கணக்கெடுப்பின் அடிப்படையில்   1000 ஆண்களுக்கு  940 பெண்கள் உள்ளனர். அதேசமயம் 6 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் விகிதம் 2011ல் 1000 ஆண்குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகளே உள்ளனர் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது 21ம் நூற்றாண்டிலும் பெண் குழந்தைகள் பிறப்பில், சமூகம் காட்டும் பாரபட்சத்தைச்  சுட்டிக்காட்டுகிறது. 

இதுபோன்ற செய்திகள் பெண்குழந்தைகளுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்ய இந்த உலக சமூகம் தவறிவிட்டது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. மேலும் உலக குழந்தைகள் தினமான இன்று பெண்குழந்தைகளுக்கான, கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவத்தை உத்தரவாதபடுத்த அரசுகள் முன்வர வேண்டும்.

;